இந்தப் புத்தாண்டன்று இரு நல்ல திரைப் படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.
மோஹன்லால் நடித்த
தன்மத்ரா மற்றும் மம்முட்டி நடித்த
கருத்த பக்ஷிகள்.
மசாலாப் படம், அல்லது கலைப்படம் என்ற இரண்டே உட்கூறுகளைக் கொண்டதாகத்தான் இருக்கிறது நம் திரை உலகம். ஆனால் தேவையான அளவு மசாலாக் கூறுககளைக் கொண்டும் ஒருநல்ல கலைப் படத்தை அளிக்க முடியும் என்று மலையாளத் திரையுலகினர் நம்புவதால்தான் இம்மதிரியான படங்களும் சாத்தியமாகிறது.
மேலும் இப்படங்களின் தயாரிப்புச் செலவு குறைவாக இருப்பதால்(குறிப்பாக நடிகர்களின் சம்பளம்), மிகப் பெரிய அளவில்ல இல்லாவிட்டாலும் ஓரளவு லாபத்தை ஈட்டி விடுகின்றன. நம்ம ஊர் நடிகைகளின் சம்பளத்தைவிட கேரளத் திரைஉலகில் கதாநாயகன் வாங்கும் சம்பளம் குறைவு எனச் சொல்லப் படுவதுண்டு.
தன்மத்ரா பற்றி முன்பே கேள்விப் பட்டிருந்தாலும், ச்சின்னப் பையன் மற்றும் தமிழ்ப்பிரியன் பரிந்துரைத்ததாலும் பார்த்தேன்.

ஒரு ஆதர்ஷ குடும்பத்தலைவன்(நல்ல கணவன், நல்ல தந்தை, நல்ல ஊழியன்) அல்சைமர் வியாதியால் தாக்கப் பட்டால் அந்தக் குடும்பம் எப்படிச் சிதறும் என்பதோடு, அவன் அந்நோயின் தாக்குதலுக்குட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறுண்டு போவதை இயல்பாகச் சித்தரிக்கிறது படம்.
பத்மராஜன், லோகிதாஸ் போன்ற சிறந்த டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பயின்ற பிளெஸ்ஸி(
Blessy) இயக்கிய படம்.
படத்தில் நடித்தவர்களை அவர்களின் நடிப்பின் அடிப்படையில் வரிசைப் படுத்ததினால், மோகன் லால், நெடுமுடி வேணு, மீரா வாசுதேவன், அர்ஜுன், சீதா, ஜகதிக்குமார் என்று சொல்லலாம். ஆனால் எல்லோரும் அவர்களுக்களிக்கபட்ட பாத்திரங்களை இதைவிட வேறெவராலும் சிறப்பாகச் செய்துவிட முடியாது என்ற விதமாகச் செய்திருக்கிறார்கள்.
எனக்கு மிகவும் பிடித்தது நெடுமுடி வேனுவின் பாத்திரம்தான். என் தந்தை போன்ற பாத்திரப் படைப்பு. மகனின் வசந்தத்தில் ஒரு பெருமிதமும் அவனின் இலையுதிர்கால வேதனையைத் தாங்க முடியாதவராகவும் என மிகப் பிரமாதப் படுத்தியிருக்கிறார்.
”இவன இந்த நிலைமையில் இங்க கொண்டுவரவா நான் வீடு வரை இந்த ரோட்டைப் போட்டேன்” என்று ஆதங்கப் படுமிடத்தில் தன் சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார்.
கேரள மாநில பரிசுகளை வென்ற படம். சப் டைட்டிலுடன் கிடைக்கிறது கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

மம்முட்டி படம் வேறு தளம். படத்தில் மம்முட்டி செய்திருக்கும் கதாப்பாதிரத்தின் பெயர் முருகன், மூன்று குழந்தைகள், அழகப்பன், மயிலம்மா மற்றும் பிறவியிலிருந்தே கண் தெரியாத மல்லி. மூன்றாவது குழந்தை பிறந்ததும் மனைவி உடல்சுகவீனத்தில் மறைந்துவிட்டாள். தினமும் இஸ்திரி வண்டியை நகர்த்திக் கொண்டு அந்நகரத்தின் மேல்தட்டு மக்களின் வீட்டு வாசலில் நின்று அவர்கள் துணியை இஸ்திரி செய்து கொடுக்கும் அன்றாடங்காய்ச்சி. தங்கியிருப்பது ரயில் நிலையத்தின் ஓரத்தில் குடிசைப் பகுதியில்.
யாராவது கண் தானம் செய்தால் மல்லிக்குப் பொருத்திப் பார்வை வரவைக்கலாம் என்கிறார் கண்டாக்டர். முருகன் இஸ்திரி செய்யும் வீடுகளில் ஒன்றில் இருக்கும் மீனா ஒரு நோயின் பிடியில் சாவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார். மல்லியைப் பற்றி அறிந்ததும், தன் கண்களைத் தானம் செய்ய முன்வருகிறார். இதை ஒட்டிய சம்பவங்களும் மனப் போராட்டங்களும்தான் கதை.
ஒரு சீரியல் ரேஞ்சுக்கு இருக்கும் கதையை தன் திறமையான திரைக்கதையால் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார், இயக்குனர்.
கலவரமொன்றில் ரவுடிகள் சிலர் ஒருவனைக் கொலை செய்து முருகனின் தள்ளுவண்டியில் வைத்து எரிக்கப்படும்பொழுது, அங்கு எரிக்கப்பட்ட மனிதனைவிட தன் வண்டி எரிகிறதே எனப் பதைக்கும் காட்சியில் அழுவதற்கு வாய்ப்பிருந்தும் அழவில்லை. இதே தமிழ்ப் படமாக இருந்தால் அந்த இடத்தில் ஓலமிட்டு அழும் காட்சி ஒன்றை வைத்திருப்பர். மொத்தப் ப்டத்திலும் மம்முட்டி ஒரு இடத்தில் கூட அழவில்லை.
இப்படமும் ஆங்கில சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.
ஒரு கதாபாத்திரத்தை முன்னிறுத்தும் விதமாகக் கதையில் மாற்றங்களைச் செய்து கதையைக் கெடுப்பதுதான் நமது வழக்கம். படம் முடிந்ததும் யாராவது ஒருவர் தூக்கலாகத் தெரியும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இவ்விரண்டு படங்களிலும் கதைதான் கதாநாயகன்.
மொத்தத்தில் இம்மாதிரிக் கதா பாத்திரங்களை ஏற்று நடிக்க தமிழகத்தில் யாரும் இல்லை என்பதும் அவ்வாறு நடித்தால் இதில் பாதி அளவாவது நடிப்பார்களா என்பதும் பெரிய கேள்வி. விடையில்லாததும் விடை காணமுடியாததும்.

காமராஜர் அமைச்சரவையில், கக்கன் போலீஸ் அமைச்சராக இருந்தார். அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் தமிழகத்திற்கு வருகிறார். அவ்விழாவில் கலந்து கொள்ள கக்கனும் அங்கு வருகிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்பதற்காக வந்த கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பதந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது.
"பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது' என்கிறார் போலீஸ்காரர்.
உடனே,கக்கன் காரிலிருந்து இறங்கி, "அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?' என்றவாறே, இரண்டு பர்லாங் தூரமுள்ள ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார்.
தற்காலமாக இருந்தால்?
************************************************************
விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துப் பனிமனைத் தொழிலாளியான கண்மணி குனசேகரன், 1993 லிருந்து எழுதி வருகிறார்.
தலைமுறைக் கோபம் - கவிதைத் தொகுப்பு
உயிர்த்தண்ணீர் - சிறுகதைகள்
அஞ்சலை - நாவல்
ஆதண்டார் கோயில் குதிரை - சிறுகதைகள்
காற்றின் பாடல் - கவிதைகள்
வெள்ளெருக்கு - சிறுகதைகள்
கோரை - நாவல்
இவற்றில் அஞ்சலை நாவலும், கோரை நாவலும் படித்திருக்கிறேன். தற்பொழுது வெள்ளெருக்கு படித்துக் கொண்டிருக்கிறேன்.
புதிய புத்தகங்கள் வாங்கினால் அதைப் பிரித்து முகர்ந்து பார்ப்பது ஒரு பழக்கம். அந்தத் தாளின் மணம் வீசுமே அதற்காகத்தான். ஆனால் குணசேகரனின் புத்தகங்களில் அவர் வசிக்கும் பகுதியில் நடமாடும் மனிதர்களின் வியர்வை வாடையும் அந்த மண்ணிலிருந்தெழும் கார நெடியும்தான் வீசுகிறது. இவ்வளவு இயல்பான எழுத்தில் மனிதர்களை நம்முன் உலவ விட முடியுமா என வியக்கவைக்குமெழுத்து அவருடையது.
காற்று கொஞ்சம் வேகமாக அடித்தது. ஊரில் அவனைப் பார்க்கிறேன், இவனைப் பார்க்கிறேன் என மார் தட்டிக் கொண்டவர்கள், வெட்டியவர்கள், குத்தியவர்கள், மண்ணைக் கவ்வியவர்கள், மண்ணை வாரி வீசியவர்கள், வேடப்பர் கோவிலில் சீட்டு எழுதிக் கட்டியவர்கள், அடுத்தவன் மனைவிக்கு ஆப்பு வைத்தவர்கள், கிண்டல் கீநூட்டு பேசியவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் என ஓயாமல் ஓடித் திரிந்தவர்கள் எரிந்தும் புதைந்தும் எதுவுமற்றுப் போன இடம் இருட்டில் ஊமையாய்க் கிடந்தது.என்ன ஒரு வீச்சு பாருங்கள். இவரது அஞ்சலை நாவலைப் படித்தவர்கள் சொல்லுங்கள் கருவாச்சி காவியத்திற்கு எந்த விதத்தில் குறைந்தது என்று. பிரபல வெளிச்சம் பாயத வெகு சில நல்ல எழுத்தாளர்களுள் இவருமொருவர்.
*************************************************************
பத்திரமாக இருக்கிறர் எனது கடவுள்
பக்தர்களின் தொந்தரவு ஏதுமின்றி
எந்தக் கருவறைக்குள்ளும்
அவரைச் சிறைவைக்கவில்லை நான்
இங்கே என்னோடுதான் வசிக்கிறார்
தற்சமயம் திண்ணையில்உட்கார்ந்துகொண்டு
காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்
மாடு மயில் வாகனங்கள் ஏதுமின்றி
நிராயுதபாணியாக
என்னைப்போல சட்டை போட்டுக் கொண்டு
என்னோடு இருக்கிறார்
தூப தீபங்களால்
மூச்சுத் திணறவைப்பதில்லை நான்
அவர் பாட்டுக்கு வருகிறார் , போகிறார்
குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்
கொடுத்ததைச் சாப்பிடுகிறார்
அதிசயமோ அற்புதமோ நிகழ்த்தாமல்
சமர்த்தாக இருக்கிறார்
என் கடவுள்
- தஞ்சாவூர்க் கவிராயர் - எழுத்துக்காரத் தெரு கவிதைத் தொகுப்பிலிருந்து.
*****************************************************************
ஏங்க.. என்னுடைய சமையல் நல்லா இருக்கா? தினம் இதேமாதிரி சமைச்சா எனக்கு என்ன கிடைக்கும்?
என்னோட இன்சூரன்ஸ் பணம்.
******************************************************************
இந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியரா இருக்கேன். முடிஞ்சா அங்கேயும் வந்து உங்க கருத்துக்களச் சொல்லுங்க மக்கா.
தாமிரா ஒரு தர்க்க ரீதியான விளையாட்டுக்கு என்னைக் கோர்த்து விட்டிருக்கார். குதர்க்கமாப் பேசுவதுன்னா சுலபம்; தர்க்கமான்னா கொஞ்சம் சிரமம்தான்.
என்னப் பத்தி இரு உண்மைகளும் ஒரு் பொய்யும் ஆக மொத்தம் 3 வாக்கியம் சொல்லனுமாம். ஹூ்ம் என்னத்தச் சொல்ல.எதையாவது சொல்லப் போய் எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு.
ஒரு கப்பல்ல இருக்க பணியாளர்களப் பத்தின அன்றாட குறிப்புகளத் துணை மாலுமி எழுதுவாராம். துணை மாலுமியப் பத்தின குறிப்ப மட்டும் தலைமை மாலுமி எழுதுவாராம். ஒரு முறை துணை மாலுமி சரக்கடிச்சுட்டு ரகளை பண்ணுனத மாலுமி குறிப்பேட்டுல எழுதிட்டாரு. து மாலுமி எவ்வளவோ கெஞ்சியும் முடியாதுன்னு சொல்லீட்டாரு. சரி உன்னப் பாத்துக்கிறேன்னு சபதம் போட்ட துணை மாலுமி, அடுத்த நாள் குறிப்பு எழுதும் போது, “இன்று மாலுமி சரக்கு எதுவும் சாப்பிடவில்லை”ன்னு எழுதுனாராம்.
துணை மாலுமி உண்மையத்தாம் எழுதுனாரு. ஆனாலும் மாலுமி மத்த நாட்கள்ல குடிச்சாருன்னும் அன்னைக்கு மட்டும் குடிக்கலன்னும் அர்த்தம் வருது பாருங்க.
இதுகூடப் பரவாயில்லைங்க. இன்னொருத்தம் பட்ட பாட்டைப் பாருங்க. அவங்கப்பா சாகும்போது அவனக் கூப்பிட்டு, எலே ஏ ராசா, எங்காலம் எப்படியோ கழிஞ்சிருச்சு, இன்னமே நீதாம் நம்ம குடும்பத்தைக் கரையேதனும். நாஞ்சொல்லுததக் கேளுன்னு சொல்லி 3 அட்வைஸ் சொன்னாரு.
1. ஆத்தாளுக்குச் சாப்பாடு போடாத.
2. குடுத்த கடனத் திருப்பிக் கேக்காத
3. வயல்ல ஆடு மாடு மேய்ஞ்சா விரட்டாத.
இதச் சொல்லீட்டு தலை சாய்ச்சுட்டாரு. 10ஆம் நாள் காரியமெல்லாம் முடிஞ்சதும் அவங்கம்மாகிட்ட அப்பா இப்படிச் சொன்னாரு எனக்கு ஒன்னும் புரியல நீ கொஞ்ச நாளு அக்கா வீட்டுல இருன்னு அனுப்பி வைக்காம்.
அப்பா கொடுத்த கடனத் திருப்பி கேகாதேன்னுட்டுச் செத்துட்டாரே நான் என்ன செய்யன்னு மருவுதான். அதே போல வயல்லயும் பயிர் பச்சை ஒன்னும் வளர்க்கல. ஆடு மாடு மேய்ஞ்சாத்தாம் வெரட்ட முடியாதே.
இப்படியே கொஞ்ச நாள் செல்லுச்சு. ஒரு தடவ வெளியூர்ல இருந்து வந்த வயசாளி ஒருத்தரு இவம் இருந்தக் கோலத்தப் பாத்து ஏல என்னல சமாச்சாரம்னு கேக்காரு. அதுக்கு இதுஇது இப்படி இப்படி ஆகிப்போச்சுன்னு எல்லாத்தையும் வெலாவாரியாச் சொன்னாம்.
அவரு சொன்னாரு ஏம்ல உனக்கு ஏதும் கோட்டி பிடிச்சிருக்கா. உங்கப்பனுக்குத்தான் வெவரமாச் சொல்ல அவகாசமில்லாம அவசரமாச் சொல்லியிருக்காம்னா, உங்க ஆத்தாளுக்கு எங்கல புத்தி போச்சுன்னு திட்டினாரு.
அவரு சொன்னதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு ஒன்னும் விளங்கல நீரு ஏதோ சொல்லுதீரேன்னாம்.
ஆத்தாளுக்குச் சோறு போடாதேன்னா, நீ சம்பாரிச்சி அவ கையில கொடுத்து அவதாம் உங்களுகெல்லாம் சொறு போடனும்னு அர்த்தம்.
கொடுத்த கடனத் திருப்பிக் கேக்காதேன்னா, கடன வாங்குறவம் நீ கேக்காமலே சொன்ன தேதில திருப்பித் தாராம்பாரு அந்த மாதிரி ஆளாப் பார்த்துக் கொடுன்னு அர்த்தம்.
வயல்ல ஆடு மாடு மேய்ஞ்சா விரட்டாதேன்னா, அது மேயுற அளவுக்கு விடாம சரியா வேலி போட்டு வெள்ளாமை பண்ணுன்னு அர்த்தம்.
இப்பத்தாம் இவனுக்கு வெளங்குச்சு. சே போ மோசம்லா போயிட்டோம்னு எல்லாத்தையும் சரி் செஞ்சாம். இது மாதிரித்தான் நானும் ஏதாவது சொன்னா அதுக்கு வேற அர்த்தம் வந்துருமோன்னுதான் யோசிக்கேன்.
பொய்தாம் சொல்லப் போறமுன்னாலும் ஒரு அளவு வேனும்ல?
நான் ரெம்ப அழகானவன்னு (அடப் பொய்தாங்க) சொன்னா கிருஷ்ணகுமார் திருப்பூர்ல சிரிக்கது இங்க கோயமுத்தூர்ல கேக்கும்.
நான் தொழிலதிபர்னு சொன்னா சஞ்சய், நந்து எல்லாம் கால் டாக்சி எடுத்துகிட்டு வந்திருவாங்க. அப்ப மாறன் பிரதர்ஸ என்னன்னு சொல்லுறதுன்னு நீங்களே கேப்பீங்க.
நான் டிப்ளமோ படிச்சிருக்கேன்னா. ஏன் பி ஈ படிச்சி டிஸ்கண்டினியூ பண்ணுனதச் சொல்லலன்னு வெயிலான் கோவிச்சுக்குவாரு. (10 பெயில் 8 பாஸ்)
நான் எழுத்தாளர் சுஜாதாவச் சந்தித்திருக்கேன்னு சொன்னா 500 பேரு இருந்த கும்பல்ல நீயும் ஒருத்தனா இருந்ததெல்லாம் ஒரு சந்திப்பான்னு, குருன்னு என் பிரண்ட் (என் பிளாகெல்லாம் படிக்கிறான்) டென்ஷன் ஆவான்.
எதுக்கு வம்பு வருஷப் பிறப்பும் அதுவுமா வம்ப விலைக்கு வாங்கி, தேர இழுத்துத் தெருவில விட வேண்டாமேன்னு பாக்குறேன். அதனால இதுக்கெல்லாம் சரியான ஆளு பாக்கி ரெண்டு பேரும்தாம்.
டிஸ்கி : புத்தாண்டு வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு பொலம்புறாரு தாமிரா. ஆனா தங்கமணி சமைக்கிறது சரியில்லன்னு புலம்பல் பதிவு மட்டும் போடுவாரு.
சென்ற பதிவில் நெல்லைக் கண்ணன் கவிதை ஒன்றைப் பின்னூட்டமாக இட்டிருக்கிறார் பரிசல்.
தமிழ்க்கடவுள்
முருகன் கோவிலில்
நீண்ட வரிசை
ஜனவரி 1.
இதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. காலண்டர் வருடம் ஜனவரி 1 ல் தொடங்குவதைத்தானே காலகாலமாகக் கடைபிடித்து வருகிறோம்? அன்று வருடத்தின் முதல்நாள் எனவே செண்டிமெண்டாகக் கோவிலுக்குப் போவது சரிதானே?
கோடை விடுமுறை கழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை, முதள் நாள் உடை, ஷீ, பேக், புத்தகம், பேனா என புதியனவாக, ஒரு உற்சாகத்துடன் செல்லுவது போலத்தான் இதுவும்.
மேலும் இந்தியர்கள் மொழியால் பிரிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, மலையாளப் புத்தாண்டு போன்றவை வேறு வேறு தேதியில் வருகின்றன. இந்தியா முழுமைக்குமான ஒரு புத்தாண்டு என்பது இதுதானே, வேறென்ன செய்ய?
என்னுடைய வாடிக்கையாளர்கள், சென்னை, பெங்களூரு, கொச்சி மற்றும் மும்பையில் இருக்கின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு ஒரே நாளில் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்ல.
புத்தாண்டு பற்றிய போஸ்டர் ஒன்று ஈரோடு முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது கீழ்க்கண்ட வாசகத்துடன்.
”மானமுள்ள தமிழா, தை முதல் நாள்தான் புத்தாண்டு”
தை முதல் நாள்தான் புத்தாண்டு தொடங்குகிறதா இல்லையா என்பதைத் தள்ளி வைத்து விட்டு, ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் என்ன தீமை என்று யாராவது சொல்லுங்கள். குடி கும்மாளம்தான் கொண்டாட்டம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது தவிர்த்து இதைக் கொண்டாட வேறு வழியிருக்கிறது. குறைந்த பட்சம், வாழ்த்துச் சொல்லி இனிப்புப் பரிமாறிக் கொள்ளத் தடை ஒன்றுமில்லையே?
சில தீர்மானங்களை எடுக்கவும் ( அதை கடைபிடிக்கிறோமா என்பது வேறு) அன்று நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து வாழ்த்துச் சொல்லவும் மற்றுமுமொரு சந்தர்ப்பம். ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது.
பெயருக்கு முன் இனிசியல் ஆங்கிலத்தில்தான் போடுகிறோம்.
கேக் வெட்டித்த் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம்.
பேண்ட் சர்ட் அணிந்துதான் தமிழை வளர்க்கின்றோம்.
ஆங்கிலத் தேதியில்தான் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றோம்.
தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கும் காலண்டர் எதுவும் இல்லை.
தமிழக அரசு ஊழியர்களுக்கான டயரி ஆங்கிலப் புத்தாண்டுக்குத்தான்.
அரசாங்கக் கலண்டர்கள் ஆங்கில புத்தாண்டுக்குத்தான்.
ஜனவரி முதல் டிசம்பர் வரைதான் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள்கணக்கிடப்படுகின்றன.
ஜனவரி 1 ஐ அரசே புத்தாண்டு தினம் என விடுமுறை அளித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, தை முதல்நாளைப் பொங்கலாகக் கொண்டாடும் விதமாக உழவர்கள் வாழ்க்கை இருக்கிறதாவெனில் இல்லை என்பதே நிதர்சனம்.
உழவன்
அறுவடை செய்து
பொங்கல் வைத்தது
அந்தக் காலம்
அவனே
ரேசன் கடைக்
க்யூவில் நின்று
பொங்கல் வைப்பது
கஷ்டகாலம்.
டிஸ்கி : தமிழ்ப் புத்தாண்டு அன்று HAPPY NEW YEAR ன்னு ஆங்கிலத்துல வாழ்த்துச் சொல்லுவது நகைமுரண் இல்லையா?
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு புத்தாண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், சவால்களையும்அதை சாதிக்க புது உத்வேகத்தையும் அளிப்பதாகத்தான் இருக்கிறது.
******************************************************************
காந்தியடிகளால் இந்தியாவின் சொத்து என்று புகழப்பட்ட ஜீவா, வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்கிறார். எதிரே வரும் அவரது நண்பர் ஜீவாவைப் பார்த்து , “ தோழர் ஜீவா, ஏன் நடந்து செல்கிறீர்கள்?
அதற்கு ஜீவா, “ பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன் என்றார்.
“அது சரி கையிலே என்ன வச்சிருக்கீங்க?”
” தோழர்கள் கொடுத்த கட்சி நிதி” என்றார் ஜீவா.
“பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?” என்றார் நண்பர்.
”கட்சி நிதின்னு தோழர்கள் தந்த பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால் கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பது தான் அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் செயலாக இருக்கும்” என்றபடியே நடையைக் கட்டினார் ஜீவா.
பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.
*********************************************************************
தமிழுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருது பெரும்பாலும் விமர்சனங்களுட்பட்டே இருந்திருக்கிறது. ஒரு விதி விலக்காக இந்த வருடம் யாரும் விரல் நீட்டிக் குறைபட முடியாத, முழுவதும் தகுதி உள்ள ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது.
பிரபல த
மி
ழ் எழு
த்தாள
ர் மேலா
ண்மை பொ
ன்னு
ச்சா
மி
க்கு ‘மின்சார
ப்பூ’ என்ற அவரது சிறுகதை தொகுப்பிற்காக அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளரான இவர், 5ஆம் வகுப்புவரை படித்துள்ளார், பலசரக்கு கடை வைத்துள்ளார்.
இவரது சிபிகள் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்துள்ளேன். ஒரு கிராமத்திலிருந்து டவுனுக்குக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் ஏறும் பயணிகளின் மன நிலையை பதிந்திருப்பார். யாரும் யாருக்கும் எதையும் விட்டுத்தரத் தயாராக இல்லாத உறுதியுடன் இருப்பர். ஆனால் சக பயணியான நிறைமாதக் கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்ததும் எல்லோரும் அவரவர் வழியில் உதவுவதுடன், ஒத்துழைப்பும் நல்குவர்.
இந்த வித்தியாச மன நிலையை மிக அழகாகப் படம் பிடித்திருப்பார். அவரது கதை மாந்தர்கள், இத்தரத்தினரே.
விருது பற்றிய மாதவராஜின் பதிவு .
***************************************************************
எது கவிதை என்பதில் அவரவருக்கான அபிப்ராயம் அவரவருக்கு, எனினும்பொதுவான கருத்து அது எழுதியவர் உணர்ந்ததை படிப்பவருக்குக் கடத்தவேண்டும் என்பதே.
கவிதை என்பதற்கான இலக்கணம் வெவேறெனினும், மேற்ச்சொன்ன இலக்குஎட்டப்படுமாயின், அது எவ்வாறாக இருப்பினும் கவிதைதான்.
விகடனில் வெளியானஇந்த முத்திரைக் கவிதைகள் அவ்வகை.
மனசு
சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?
- பா.கீதா வெங்கட்
உயிரின் ஒலி
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
- மகுடேசுவரன்
செவலையெனும் சித்தப்பு
அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.
மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.
எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.
- சிவராஜ்
***************************************************
ரயிலில் இரு பெண்மணிகள், சுமார் 35 வயதிருக்கும், தங்களுக்குள் யார் வயதுகுறைவு என்பது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர், பிரண்ட்லியாகத்தான். இருவரும் தங்கள் வயது 25 லிருந்து ஒன்றோ இரண்டோதான் அதிகம் என்பதைநிறுவ மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.
பொறுக்க முடியாமல் அருகில் அமர்ந்திருந்த 50 வயசுக்காரர் எழுந்து சொன்னார்,
“என்னக் கொஞ்சம் அப்பர் பெர்த்துக்கு ஏத்தி விடுறீங்களா?”
“ஏங்க”
“இல்ல எனக்கு வயசு 12 தான் ஆச்சு , மேல ஏற முடியாது, அதுதான்”

ஒரு முறை ராஜாஜியின் மாளிகையில் தங்கினார் காந்தி. அவர் தங்கியிருந்த அறையில் சத்தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று உள்ளே நுழைந்தார் பாரதியார். காந்தியை வணங்கி விட்டு அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
"மிஸ்டர் காந்தி! இன்று மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் நான் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?' என்று காந்தியைக் கேட்டார் பாரதியார். அந்த நேரத்தில் மற்றோர் இடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையால், "கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?' என்று திருப்பிக் கேட்டார் காந்தி.
"ஒத்தி வைக்க முடியாது; நான் போய் வருகிறேன்! தாங்கள் துவங்கப் போகும் இயக்கத்தை நான் வாழ்த்துகிறேன்!' என்று போய்விட்டார் பாரதியார்.
பாரதி வெளியேறியதும், "யார் இவர்?' என்று கேட்டார் காந்தி. அவர், "எங்கள் தமிழ் நாட்டுக் கவி!' என்று சொன்னார் ராஜாஜி. "இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இதற்குத் தமிழகத்தில் ஒருவரும் இல்லையா?' என்றார் காந்தி.
(நன்றி : தினமலர்)
பாதுகாக்க ஆளில்லாவிட்டாலும் நினைத்துப்பார்க்கக்கூட ஆளில்லதவராக ஆகிவிட்டார். டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர். இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கி வளரும் சமுதாயமே முன்னேறும்.
***************************************************
பூமணியின் வெக்கை நாவல், அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும் சாதாரணக் கதைதான். ஆனால் எழுதப்பட்ட விதத்தில் சிறந்த படைப்பாக ஆகியிருக்கிறது.
15 வயதே ஆன செலம்பரம்(சிதம்பரம்) அண்ணனைக் கொன்றவனின் கையெடுக்கும் முயற்சியில் தோற்று ஆளையே கொன்று விடுகிறான். அவனறியாமல் அவனுக்கு உதவி செய்ய வரும் அப்பாவும் அவனும் அதன்பின் காட்டுக்குள் மறைந்து வாழ்வதும், அந்தச் சம்பவத்தை செய்யத் தூண்டிய காரணமும் அதனிடையே அவர்களது வாழ்க்கையுமென நாவல் பரந்து விரிகிறது.
ஒரு குடும்பமும் அதன் உறவின்முறைகளும் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அவர்களுக்கு உதவுவதும் அரசாங்க நிறுவனம் பணம்படைத்தவர்களின் கைக்கூலியாகச் செயல்படுவதும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
”ஏதோ பழிக்குபழி வாங்கினான் என்று மலினமாகியிருக்கக்கூடிய ஒரு சம்பவதைப் பிரியத்துகுரியதாக நாவல் ஆக்க முனைந்துள்ளது. வன்முறையை உள்ளடக்கிய வாழ்க்கையில் வர்க்க நலன்கள் மோதுகிற சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப உறவுகள் மிக இனிமையான மனிதச் சூழல்கள் ஆகிய ஒரு உலகிற்குள் சஞ்சரிக்கிறார் பூமணி” ராஜ் கெளதமன் (சிலுவை ராஜ் சரித்திரம் - நாவலாசிரியர்)
இது போன்ற யதார்த்த நாவல்கள் அதிகக் கவனம் பெறாமல்போவதும், பிற நாவல்கள் விளம்பரப்படுத்தல் மூலமும் , சந்தைப்படுத்தல் மூலமும் உலக உயரத்தில் என புகழப்படுவது தமிழிலக்கிய உலகின் ஒரு நகைமுரண்.
****************************************************************
”இரட்டைக் குழந்தைகளோட அச்சன் “ என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். 90 களின் ஆரம்பத்தில் வந்த படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஸ்ரீனிவாசன் கதை திரைக்கதை எழுதியது.
நான்காவது பிரசவத்திலும் இறந்து பிறந்த குழந்தையுடன் போராடும் தந்தைக்கு ஆறுதலளிக்க தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளிலொன்றைக் கொடுக்கிறார் ஜெயராம்; மனைவிக்குத் தெரியாமல்,அரைமனதுடன்.
பிறிதொரு நாளில் தாங்க முடியாத மன அழுத்தத்தில் அதைச் சொல்லிவிட நேர்கிறது மனைவியிடம். அதன் பின்னெழும் உக்கிரகரமான சம்பவங்களும் மனநிலைகளில் ஏற்படும் மாற்றமுமாக நகர்கிறது படம். கொஞ்சம் அதிகமாகி இருந்தாலும் தற்கால மெகாத்தொடர் போல ஆகியிருக்கும் அபாயமுள்ள கதையை தேர்ந்த திரைக்கதை முலம் சுவராஸ்யமாக்கியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.
தமிழில் இதுபோல ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை.
மலையாளக் திரையுலகிற்கும் தமிழ்த் திரையுலகிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசமே அதற்குத் தடைக்கல். அங்கே கதை நடிகர்களைத் தீர்மானிக்கிறது. ஆனால் இங்கே நடிகர்கள்தான் கதையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வரையறைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது கண்கூடு.
*************************************************************
தெயவம் மனிதனாய் ஜனித்தால்
ஜீவிதம் அனுபவிச்சறிஞ்சால்
திருச்சி போகுமுன்னே
தெய்வம் பறயும்
மனிதா நீதான்
எண்ட தெய்வம்.
(திருச்சி - திரும்பி)
இது சமீபத்தில் இரு மலையாளிகள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்ட கவிதை வரிகள். மூலத்தில் எழுதியவர் யார்? தமிழ்ப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனில் என்ன அப்புத்தகத்தின் பெயர்? யாராவது உதவமுடியுமா?
இனி இந்தவாரக் கவிதை.
பயனிகள் கவனிக்கவும்
ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது
கேட்டதை கொடுத்து மீதி சில்லறையும்
கொடுக்கிறார் மறக்காமல்
இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொருக் கைக்கு கொடுக்கிறார்
அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கி கொள்கிறது
சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்
தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லறை
இதை அந்த குப்பை தொட்டியில் போடு
என்று சொன்ன - ஒரு
சிறுமி கைக்கு பணிகிறார்
ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை
வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய கைகள்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்
-
ரவிஷங்கர் உயிரோசையில் வெளியான கவிதை
***********************************************************
ஓரு மலையாளியிடம் கடன் வாங்கியவர் பட்ட அனுபவம் இது.
கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார் மலையாள அன்பர். நாளை காலையில் தருகிறேன் என்பார். காலையில் வந்தால் மாலையில் தருகிறேன் என்பார். இப்படியாகக் காலை மாலை என மாற்றி மாற்றி அவரை அலைகழித்திருக்கிறார் இவர்.
வெறுத்துப் போன மலையாள அன்பர் சொன்னார், “ சாரே இது சரியில்ல கேட்டோ? ராவிலே ஒரு சம்சாரம், ராத்திரிக்கு ஒரு சம்சாரம்.”
திட்டிவிடு அவர் போன பின் இவர் அவர் தங்கமணியிடம் நாய் பட்டபாடு பட்டார்.
மலையாளத்தில் சம்சாரம் என்றால் பேச்சு என்றும் ராவிலே என்றால் காலையில் என்றும் அர்த்தம் சொல்லி அவர் தங்கமணிக்கு விளங்க வைத்தார்கள்.
சம்சாரம்னாலே பேசீட்டே இருப்பாங்கன்னுதான் மலையாளத்துல அப்படி வ